2027 ஒருநாள் உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்ற ரோகித் சர்மாவின் கனவை உடைத்ததா பிசிசிஐ?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதையே வைத்திருந்தார். 2023 உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்டாலும், 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று தனது திறமையை நிரூபித்தார்.

ரோகித்தின் வாழ்நாள் லட்சியம்:
ஒருமுறை ரோகித் சர்மாவிடம் அவரது மிகப்பெரிய லட்சியம் குறித்துக் கேட்கப்பட்டபோது, "எனக்கு உலகக்கோப்பை என்றால் அது ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன். ஓய்வு பெற்றபிறகு இந்திய அணியின் கேப்டனாக எத்தனை கோப்பைகளை வைத்திருக்கிறேன் என்பதே பெரிய விஷயம்" என்று உணர்ச்சிபொங்கத் தெரிவித்திருந்தார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பிறகும், "நான் இங்கிருந்து எங்கும் ஓடிவிடவில்லை, வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடப் போகிறேன்" எனக் கூறி, 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தனது இலக்கை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
பிசிசிஐ-யின் திடீர் முடிவு:
ஆனால், ரோகித் சர்மாவின் இந்த லட்சியக் கனவை உடைக்கும் நடவடிக்கைகளில் பிசிசிஐ-யும் இந்திய அணியின் தேர்வுக்குழுவும் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. வயதுமூப்பு, ஃபிட்னஸ் போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் அகர்கர், ரோகித் மற்றும் விராட் கோலி இருவரும் 2027 உலகக்கோப்பை குறித்து எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஒருநாள் உலகக்கோப்பை வெல்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கருதிய ரோகித் சர்மா, எப்படி அந்த கனவை விட்டுக்கொடுத்திருப்பார்? என்ற கேள்வியும் எழுகிறது.
ஓடிஐ உலகக்கோப்பையின் முக்கியத்துவம்:
2011 ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காத வேதனையை ரோகித் சர்மா வெளிப்படுத்தியிருந்தார். 2019-ல் 5 சதங்களுடன் தனி உலக சாதனை படைத்தும், இந்தியா அரையிறுதியில் தோற்றபோது கண்ணீர் விட்டு அழுதார். 2023 உலகக்கோப்பையில் தோல்வியடைந்தபோதும் அவர் கலங்கிய கண்களுடன் ஒதுங்கிப் போனார்.
எனவே, அவரது அதிகபட்ச இலக்கு ஒருநாள் உலகக்கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தேர்வுக்குழுவின் முடிவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் ரோகித்-கோலி சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? என்ற அதிர்ச்சி தகவலுடன் இந்த செய்தி வைரலாகி வருகிறது.
0 Comments