Subscribe Us

விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு? கரூர் சம்பவத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் முக்கியப் பரிந்துரை!

தற்போது 'ஒய்' பிரிவில் உள்ள விஜய்யின் பாதுகாப்பை அதிகரிக்கப் பரிந்துரை!

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் அவர்களுக்கு இசட் பிரிவு’ (Z-Category) பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விஜய் Z பிரிவு பாதுகாப்பு

கரூர் கூட்டத்தில் நிகழ்ந்தவை:

கரூர் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்த், இணைச் செயலர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், த.வெ.க. தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, "போலீசார் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறினர். கூட்டம் நடத்துவதற்கேற்ப பெரிய இடத்தை ஒதுக்குமாறு மனு அளித்தும் ஒதுக்கவில்லை" என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கூட்டத்தில் காலணிகள் வீசப்பட்டதாகவும், நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்தில் நுழைந்ததாலேயே நெரிசல் ஏற்பட்டதாகவும் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

பாதுகாப்பை அதிகரிக்கக் கோரிக்கை:

இந்தச் சூழ்நிலையில், கரூரில் விஜய்க்குப் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகக் கோரப்பட்டதை அடுத்து, விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். மேலும், த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன் விளைவாக, தற்போது ‘ஒய் பிரிவு’ பாதுகாப்புடன் இருக்கும் விஜய்க்கு, பாதுகாப்பை மேலும் பலப்படுத்தக் கோரி ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்படவுள்ள இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

Post a Comment

0 Comments